Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜனவரி (ஹி.ச.)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளரான இரா. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் பாடலுக்காக இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் முன்னணி பாடகர்களான அறிவு மற்றும் வேடன் ஆகியோர் இணைந்திருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' எனும் திரைப்படத்தில் இரா. முத்தரசன், சமுத்திர கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் V . ஜெரின் ஒளிப்பதிவு செய்ய, K. S. நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருக்கிறார்.
விவசாயத்தையும், விவசாயிகளையும் மையப்படுத்தி உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் P. சண்முகம் - S.M. பிரபாகரன் - மகேந்திர பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பணிகள் நிறைவடைந்திருக்கும் தருணத்தில், விவசாயத்தை பற்றிய பாடல் ஒன்றை இசைஞானி இளையராஜா உருவாக்கி இருக்கிறார். அந்தப் பாடலை பாடலாசிரியர் அறிவு எழுத, பிரபல பாடகரான வேடன் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். விவசாயிகளின் போராட்டக்கரமான வாழ்வை விவரிக்கும் வகையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் வெளியான பிறகு பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி (2026) மாத இறுதியில் நடைபெறும் என்றும் பிப்ரவரி மாதத்தில் படத்தின் வெளியீடு இருக்கும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிவப்பு சிந்தனையின் அரசியல் பிம்பமான இரா. முத்தரசன்- சமுத்திர கனி - வேடன் - அறிவு- ஆகியோர் 'இசைஞானி' இளையராஜாவுடன் கூட்டணி அமைத்திருப்பதால், இந்த பாடலுக்கு இசை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ