Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 1 ஜனவரி (ஹி.ச.)
பதிவு செய்யப்பட்ட சிறு பார்சல்களை, வெளிநாடுகளுக்கு அனுப்புவது உள்ளிட்ட சில சேவைகளை நிறுத்துவதாக, அஞ்சல்துறை அறிவித்துள்ளது. இன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து மத்திய அரசின் அஞ்சல்துறை வெளியிட்ட செய்தி அறிக்கை:
சிறிய கவர்களில் வைத்து பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் சிறு பார்சல் சேவை, ஜன.1 முதல் நிறுத்தப்படுகிறது. சர்வதேச போஸ்டல் யூனியன் சில விதிகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடிதங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை மட்டுமே இனி சிறிய கவர்களில் வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பலாம்.
பார்வை திறனற்றோருக்கான அஞ்சல் சேவைகளில் மாற்றம் ஏதுமில்லை. கவர்களில் பொருட்களை வைத்து, தரை, கடல், வான்வழி அஞ்சல் சேவையாக பட்டுவாடா செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.
இம்முறையில் அனுப்பப்படும் பார்சல்களை, 'டிராக்' சேவை எனப்படும், பார்சல் இருக்கும் இடத்தை கண்டறிய முடியாது என்பதுடன் பட்டுவாடா செய்வதற்கும் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே, புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி இனி, ஏதேனும் பொருட்கள், ஏற்றுமதி சரக்குகளை அனுப்பவதாக இருந்தால் ஐ.டி.பி.எஸ்., எனப்படும், டிராக் செய்யும் சேவை வழியாக அனுப்பலாம்.
இதில் அனுப்பப்படும் பார்சல்கள் பயணிக்கும் வழியெங்கும் 'டிராக்' செய்ய முடியும். சுங்கம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பூர்த்தி செய்யும் இந்த சேவையில் பார்சல்களும் விரைவாக சென்றடையும்.
இது, ஏற்றுமதியாளர்களுக்கும் 'இ-காமர்ஸ்' விற்பனையாளர்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.
இம்மாற்றம் குறித்து அஞ்சல் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் புதிய நடைமுறைகளுக்கு மாற அவர்கள் உதவுவர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM