2025-ல் சைபர் குற்றவாளிகள் 177 பேர் கைது - மாநகர காவல் ஆணையர் தகவல்
சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.) சென்னையில் 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் தலா 105 கொலைகள் நடந்துள்ளன. 2025-ல் இது 93 ஆக குறைந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார். மேலும் திடீரென உணர்ச்சி வசப்படுதல், தவறான உறவு, பணம் ஏமாற்றியது, இடப்பிரச்சினை, மது
2025-ல் சைபர் குற்றவாளிகள் 177 பேர் கைது - மாநகர காவல் ஆணையர் தகவல்


சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.)

சென்னையில் 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் தலா 105 கொலைகள் நடந்துள்ளன. 2025-ல் இது 93 ஆக குறைந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.

மேலும் திடீரென உணர்ச்சி வசப்படுதல், தவறான உறவு, பணம் ஏமாற்றியது, இடப்பிரச்சினை, மதுபோதையில் சண்டை போன்ற காரணங்களால் கொலைகள் நிகழ்ந்துள்ளன.

புதிதாக தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கைகளால் ரவுடி கொலைகள் நடக்காமல் தடுக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டு சென்னையில் வழிப்பறி, திருட்டு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் மற்றும் வாகன திருட்டுகளும் வெகுவாக குறைந்துள்ளன.

2023-ல் 325, 2024-ல் 256 வழிப்பறி நடைபெற்றிருந்த நிலையில் 2025-ல் 180 வழிப்பறி மட்டுமே நிகழ்ந்துள்ளது. தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டதாக 2023-ல் 714 பேரும், 2024-ல் 1,302 பேரும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2025-ல் 540 ரவுடிகள், 125 திருட்டு வழக்கு குற்றவாளிகள், 348 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,092 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2025-ம் ஆண்டு 66 போக்சோ வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்ற விசாரணை மூலம் கடும் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து 6,175 மனுக்கள் பெறப்பட்டு விசாரித்து, அவற்றில் 5,474 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2025-ல் சைபர் குற்றவாளிகள் 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, ரூ.34 கோடியே 74 லட்சத்து 48,243 மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்ட 1,389 பேருக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சென்னை போலீஸாரின் திறன் மிகுந்த பணியே இதற்கு காரணம் என்று காவல் ஆணையர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b