Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.)
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக ஜனவரி 9-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை 6 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று (ஜனவரி 09) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தினமும் 2,092 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் நேற்று கூடுதலாக 1050 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதே போல, பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் நேற்று 1,100 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டன.
இன்று (ஜனவரி 10) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,030 பேருந்துகள் என மொத்தம் 3,122 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த முறை பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை வருவதால் 4 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கிறது. இதனால், பெரும்பாலான ஐடி நிறுவனப் பணியாளர்கள் வார இறுதி விடுமுறையுடன், திங்கள், செவ்வாய், புதன் ஆகிய பணிநாட்களை வீட்டில் இருந்து பணிபுரியும் சலுகை பெற்றுக்கொண்டு, தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்படத் தயாராகியுள்ளனர்.
அலுவலக பணியாளர்களுக்கு புதன்கிழமை முதல் விடுமுறை கிடைக்கும் என்பதால் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் கூடுதலாக 2,000 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
மேலும், பயணிகளின் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
Hindusthan Samachar / vidya.b