வெற்றிக்கு பிறகு அமைச்சர்களை இபிஎஸ் தான் தேர்ந்தெடுப்பார் - நயினார் நாகேந்திரன்
கோவை, 10 ஜனவரி (ஹி.ச.) கோயம்புத்தூர் மாவட்டம், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மேலிட பொருப்பாளர் சுதாகர் ரெட்டி உ
நயினார் நாகேந்திரன்


கோவை, 10 ஜனவரி (ஹி.ச.)

கோயம்புத்தூர் மாவட்டம், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மேலிட பொருப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்‌.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்,

முகலாயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பெருவாரியான இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டதாக கூறினார். குறிப்பாக முகமது 17 முறை படை எடுத்து நம்முடைய கோவில்களில் உள்ள செல்வங்களை கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்தார்.

தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தவர், வரக்கூடிய தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டதாக கூறினார்.

மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

இந்தமுறை, இரட்டை எண்ணிக்கையில் பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருப்பார்கள் என அடித்துக் கூறிய நயினார் நாகேந்திரன், எவ்வளவு இடங்களில் பாஜகவினர் போட்டியிடுவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

அதே சமயம், தேமுதிகவிடம் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதனையும் அவர் உறுதி செய்தார். கூட்டணியில் இருந்து எல்லோரும் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று ஊடகங்கள் சொன்னதாகவும் ஆனால் தற்பொழுது எல்லோரும் வந்து கொண்டிருக்கிறார்கள் முதலாவதாக அன்புமணி ராமதாஸ் வந்து விட்டார் எனவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்‌.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றவர் பாஜகவின் குறி கொங்கு மண்டலம் அல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடும் தான் என்றார். அதோடு, பராசக்தி படத்தில் தீ பரவட்டும் என்ற வார்த்தை நீக்கம் சென்சார் போடும் முடிவு என்றும் படத்தில் அண்ணாவின் வசனங்கள் நீக்கப்பட்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது அண்ணாவைப் பார்த்து யாரும் பயப்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam