Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.)
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு வாரமும்,ஒவ்வொரு சதவீத கணக்கைக் கூறி வருகிறார் என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை அவருக்கு நினைவூட்ட, வாக்குறுதி எண் 181-ஐ, நெற்றியில் எழுதிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 2016 தேர்தலிலேயே, பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து, அவர்கள் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவளித்த அப்போது எதிர்க்கட்சியாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, 10% வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க, தனது தங்கை தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக தமிழக மக்களை எத்தனை ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
திமுகவின் நம்பிக்கை மோசடிக்கு, 2026 தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ