முன்பகை காரணமாக தம்பதி வெட்டிக்கொலை - 8 பேர் கைது
திண்டுக்கல், 10 ஜனவரி (ஹி.ச.) திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் கென்னடி (41). இவர் கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்த பின்னர் அவரது மோட்டார் சைக்கிளில் நத்தம் - திண்டுக்கல் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போத
Murder


திண்டுக்கல், 10 ஜனவரி (ஹி.ச.)

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் கென்னடி (41). இவர் கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்த பின்னர் அவரது மோட்டார் சைக்கிளில் நத்தம் - திண்டுக்கல் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆர்.எம்.டி.சி காலனி அருகே வந்த போது திடீரென பின்னால் வந்த கார் ஜேசுராஜ் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி ஜேசுராஜ் கீழே விழுந்த போது காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் திடீரென அவரை அரிவாளால் தாக்கினர். இதனால் உயிருக்கு பயந்து சாலையில் ஓடினார். இருந்த போதும் கொலை வெறி கும்பல் அவரை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டி தலையை சிதைத்தனர். இதனால் உயிருக்கு போராடிய நிலையில் ஜேசுராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த கும்பல் யாகப்பன்பட்டியில் உள்ள ஜேசுராஜின் இரண்டாவது மனைவி ஞான தீபிகாவை வீட்டில் இருந்து வெளியே வரவழைத்தனர். பின்பு தீபிகாவை வீட்டின் வெளியே வைத்து வெட்டினர். இதை தடுக்க சென்ற அவரது மகன், உறவினர் மகளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சரிந்து விழுந்த தீபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு எஸ்.பி. பிரதீப், டி.எஸ்.பி சங்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ரியல் எஸ்டேட் அதிபரும், திமுக பிரமுகருமான மாயாண்டி ஜோசப்பும், ஜேசுராஜூம் உறவினர்கள். இந்நிலையில், ஊரில் உள்ள மாதா கோயில் திருவிழாவை ஜேசுராஜ் தலைமை தங்கி நடத்தி வந்துள்ளார். கோயில் கணக்கு வழக்கில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக கூறி தலைமை பதவியில் இருந்து ஜேசுராஜ் நீக்கப்பட்டுள்ளார். பதவி பறிபோனதற்கு மாயாண்டி ஜோசப் தான் காரணம் என்று நினைத்த ஜேசுராஜ், மாயாண்டி ஜோசப் உடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் 2024 மே மாதம் 23ம் தேதி அன்று டாஸ்மாக் கடையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மாயாண்டி ஜோசப்பை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜேசுராஜ் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில், ஜேசுராஜ், டேனியல் ராஜா, அலெக்ஸ் பிரிட்டோ, காளீஸ்வரன், பிரவீன் குமார் மற்றும் சிறுவர்கள் இருவர் கைது செய்யப்படுகின்றனர். இந்த வழக்கானது திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,ஜேசுராஜ் உள்ளிட்ட நபர்களுக்கு இரண்டு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மதுரை சிறையில் இருந்த ஜேசுராஜை இரண்டாவது மனைவியான தீபிகா 19.12.25 அன்று பிணையில் எடுக்கிறார். இதனால் மாயாண்டி ஜோசப்பின் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் தொடர்ந்து அவரை நோட்டம் பார்த்த ஜோசப்பின் உறவினர்கள், கொசவப்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த பொழுது ஜேசுராஜை மடக்கி தீர்த்துக்கட்டியுள்ளனர்.

அதனை தொடர்ந்து ஜேசுராஜை பிணையில் எடுத்து உதவியதற்காக இரண்டாவது மனைவி தீபிகாவையும் அவரது வீட்டின் வெளியே வைத்து வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

இந்த இரட்டைக்கொலை சம்பவத்தில் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஞானராஜ், தர்மர், அருள், ஜான்பீட்டர் (எ) காற்று உள்ளிட்ட 8 பேரை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN