கண்டிப்பா நாம தான் ஜெயிப்போம் கட்சி வேலையை பாருங்க - நேர்காணலுக்கு வந்த நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி ஊக்கம்
சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.) அதிமுகவில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு வழங்கியவர்களுக்கு எம்ஜிஆர் மாளிகையில் இரண்டாவது நாளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று காலை பேட்ச் வாரியாக நடைபெற்று வரும் நேர்காணலில் மாவட்ட வாரியாக அமர
இபிஎஸ்


சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.)

அதிமுகவில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு வழங்கியவர்களுக்கு எம்ஜிஆர் மாளிகையில் இரண்டாவது நாளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.

இன்று காலை பேட்ச் வாரியாக நடைபெற்று வரும் நேர்காணலில் மாவட்ட வாரியாக அமர வைத்து நேர்காணல் நடத்தி வருகிறார். இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கட்சி பணியை ஆற்ற அறிவுறுத்தி உள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பா நாம தான் ஜெயிப்போம்... கட்சி வேலையை பாருங்க... தமிழ்நாட்டில் நாம தனிச்சு போட்டியிட்டால் கூட 234 பேர் தான் போட்டியிட முடியும். ஆனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பமனு தரப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக தொகுதிக்கு யாராவது ஒருத்தங்களுக்கு தான் சீட் கிடைக்கும். சீட்டு கிடைக்காதவங்க கட்சிக்காக வேலை பாருங்க. வருங்காலங்களில் அவங்களுடைய பணிகளுக்கு ஏற்ப கண்டிப்பா அங்கீகாரம் கிடைக்கும்.

சளைக்காம வேலையை பாருங்க. யாரை நிறுத்தினாலும், கூட்டணி கட்சியா இருந்தாலும் அவங்கள ஜெயிக்க வைக்கிறதுக்கு உண்டான வேலைய பாருங்க என எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலை 09:40 மணிக்கு நேர்காணல் தொடங்கிய நிலையில் 12:30 மணி வரை கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, தேனி கிழக்கு, தேனி மேற்கு, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நேர்காணல் நிறைவடைந்துள்ளது.

திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், விருதுநகர் கிழக்கு ஆகிய மாவட்டத்தினர் நேர்காணலுக்காக காத்திருக்கின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam