Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 10 ஜனவரி (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மலர் சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது.
அதற்கு காரணம் இந்த பகுதியில் ஆண்டுதோறும் நிலவி வரும் சீதோஷண நிலை. அதுவும், இந்த பகுதியில் விளையும் மல்லிகை பிரசித்திப் பெற்றவை. இந்த பகுதி மல்லிகை வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக, இந்த பகுதியில் அதிகாலை கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக மல்லிகைச் செடிகளில் மொட்டுகள் அரும்பு விடாமல் பனியால் கருகின. இதனால் மல்லிகை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
20 கிலோ விளைச்சல் கொடுத்த மல்லிகை தோட்டங்களில் தற்போது வெறும் 200 கிராம் பூக்கள் கிடைக்கின்றன. இதனால் நிலக்கோட்டை மலர் சந்தைக்கு மல்லிகை வரத்து கடுமையாக சரிந்துள்ளது.
இதன் காரணமாக நிலக்கோட்டை மலர் சந்தையில் மல்லிகை பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூபாய் 10 ஆயிரத்தை தாண்டியது. பூக்கள் கிடைக்காததால் ஏராளமான வெளிநாடு ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக பூ விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இதே போல் செடியில் இருந்து பறித்து வரப்படும் அரும்பு மொட்டுக்களுக்கும் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு கிலோ அரும்பு மொட்டுமல்லி ரூபாய் 5 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 7500 வரை விற்பனையாகிறது. தொடர்ந்து வரத்து குறைந்து காணப்பட்டால் மல்லிகை பூ விலை இன்னும் பல மடங்கு உயரும் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இதே போல் முல்லைப் பூ கிலோ ரூபாய் 1,800-க்கும், பிச்சிப் பூ கிலோ ரூ. 1,600-க்கும் நிலக்கோட்டை மலர் சந்தையில் விற்பனையாகி வருகிறது.
வரத்து குறைந்த போதும் கொண்டு வரப்படும் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN