Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.)
இந்திய அளவில் ஆஸ்கர் விருதிற்கு தேர்வான 5 படங்களில் ஒன்றாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஆருயிர் இளவல் யுவராஜ் அவர்களின் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவன தயாரிப்பில், அன்புமகன் இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அவர்களின் இயக்கத்தில் வெளியான திரை ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைகொண்டு, மாபெரும் வெற்றிப்படைப்பான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்
98வது ஆஸ்கர் விருதிற்கான சிறந்த திரைப்படத்திற்கான பொதுப் பட்டியலில்உலக அளவில் தேர்வான 201 படங்களில் ஒன்றாகவும், இந்திய அளவில் தேர்வான 5 படங்களில் ஒன்றாகவும் தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இயல்பான அழகியலுடன் மிக நேர்த்தியாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை இயக்கிய அன்புமகன் 25 வயது இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அவர்களின் அளப்பரிய கலைத்திறனுக்கும்,தம்பி சசிக்குமார், சிம்ரன், அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி யோகிபாபு ஆகியோரின் ஒப்படைப்பு மிக்க நடிப்பிற்கும்,
படக்குழுவினரின் கடின உழைப்பிற்கும் கிடைத்துள்ள மாபெரும் அங்கீகாரமாகவே இத்தேர்வினை பார்க்கின்றேன்.
ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் துயர துன்பங்களை எண்ணி எண்ணி 'என்று தணியுமோ எங்கள் சுதந்திர தாகம்' என்று உள்ளுக்குள் அழும் ஒவ்வொரு தமிழனின் உள்மன உணர்வுகளை உலகிற்கு உணர்த்து மாபெரும் கலைப்படைப்பான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ஆஸ்கர் விருதினை வென்று, அதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, ஈழத்தாயக விடுதலைக்கான பேராதரவை பெற்றுத்தர வேண்டும் என்ற பேராவல் மனதை தொற்றிக் கொண்டுள்ளது.
உலகத்தமிழ்ச்சொந்தங்களின் ஒருமித்த ஆதரவுடன் 'டூரிஸ்ட் பேமிலி திரைப்படம்' சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை வென்றெடுக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ