Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 10 ஜனவரி (ஹி.ச.)
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 30ம் தேதி அதிகாலை நடைபெற்றது.
தொடர்ந்து ராப்பத்து உற்சவம் நடந்தது. ராப்பத்து 7ம் நாளன்று திருக்கைத்தல சேவையும், 8ம் நாளன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ராப்பத்து நிறைவு நாளான நேற்று (ஜனவரி 09) நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார். இதையடுத்து நம்பெருமாள் நேற்று இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இன்று (ஜனவரி 10) அதிகாலை 2 மணி வரைசந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதைதொடர்ந்து இன்று (ஜனவரி 10ம் தேதி) முதல் உற்சவர் ரங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவம் முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி, வரும் 20ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். இன்று முதல் ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழி திருநாள் வரும் 15ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
20ம் தேதி இயற்பா சாற்றுமுறை நடைபெறும்.அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும்.
Hindusthan Samachar / vidya.b