Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 10 ஜனவரி (ஹி.ச.)
சபரிமலையில் ஜனவரி 14 மகரஜோதி விழா நெருங்கி வரும் நிலையில் அதன் முன்னோடியாக நடக்கும் முக்கிய சடங்குகளில் ஒன்று எருமேலி பேட்டை துள்ளல்.
கார்த்திகை 1 மண்டல சீசன் தொடங்கிய நாள் முதல் எருமேலியில் இது நடந்தாலும் மகரஜோதிக்கு முன் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனுடன் இங்கு பேட்டை துள்ளல் நிறைவுறும்.
நாளை மதியம் 12:00 மணியளவில் ஆகாயத்தில் வட்டமடித்து பறக்கும் கருடனை பார்த்ததும் அம்பலப்புழா பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட யானையுடன் பேட்டை துள்ளி பேட்டை சாஸ்தா கோயிலில் இருந்து வெளியே வருவர். அம்லப்புழா கிருஷ்ணசாமி கோயிலில் மதியம் உச்ச பூஜை முடிந்து நடை அடைத்த பின்னர் கருட வடிவில் கிருஷ்ணர் எருமேலி வருவதாக ஐதீகங்கள் கூறுகிறது. வாவர் பள்ளியை வலம் வந்த பின்னர் எருமேலி பெரிய சாஸ்தா கோயிலில் தங்கள் பேட்டையை நிறைவு செய்வர்.
அது போல மதியம் 3:௦௦ மணிக்கு ஆகாயத்தில் ஒளிவிட்டு பிரகாசிக்கும் நட்சத்திரத்தை பார்த்ததும் ஆலங்காடு பக்தர்கள் பேட்டை துள்ளலை தொடங்கி எருமேலி பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்வர். இதற்கு முன்னோடியாக இன்று எருமேலியில் சந்தனக்குட பவனி நடக்கிறது.
சபரிமலையில் அதிக பக்தர் கூட்டம் மற்றும் அதிக விற்பனை காரணமாக டிசம்பர் 23 முதல் ஒரு பக்தருக்கு 10 டின் அரவணை என்ற கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் கியூவில் நின்று தங்களுக்கு தேவையான அரவணையை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டதால் எப்போதும் அதற்கான கவுன்டர்களில் நீண்ட கியூ காணப்பட்டது.
இந்நிலையில் இந்த கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதாக தேவசம்போர்டு அறிவித்தது.
தற்போது 16 லட்சம் டின் அரவணை கையிருப்பு உள்ளதாக கூறியுள்ளது. இதனையடுத்து பக்தர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப அரவணை வாங்கிச்செல்கின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM