Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 10 ஜனவரி (ஹி.ச.)
கரூரில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வேலுச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினர், காவல்துறையினர், தவெக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தடயவியல் துறை அதிகாரிகளும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர், கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியான சம்பவ இடத்தில் உயர்ரக தொழில்நுட்ப கேமிராவுடன் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய வாகனம் கொண்டுவரப்பட்டு வாகன ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வரும் 12ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கிய நிலையில் தற்போது சிபிஐ விசாரணை தீவிரமெடுத்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN