Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.)
2026ம் ஆண்டு குறள் வாரவிழா கொண்டாடிட தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது. அவ்வகையில், திருக்குறள் நாட்டிய நாடகம், இசை நிகழ்ச்சி, குறள் சார்ந்த ஓவியப் போட்டி, குறள் ஒப்பித்தல் போட்டி (பொதுமக்களுக்கு மட்டும்) கல்லூரி மாணவர்களுக்கான குறள் சார்ந்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஓவியம், படத்தொகுப்பு, ஒளிப்படப் போட்டி, திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் குறளாசிரியர் மாநாடு மற்றும் குறள் வினாடி வினா, ஜேம்ஸ் வசந்தன் தமிழோசை நிகழ்ச்சி ஆகியவை குறள் வார விழா நிகழ்ச்சிகளாக நடைபெற உள்ளன.
சேலம், திருச்சி, தேனி, கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் திருக்குறள் நாட்டிய நாடகம், இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஓவியம், குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற உள்ளது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 10) வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
குமரி முனையில் முத்தமிழறிஞர் நிறுவிய StatueOfWisdom-இன் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் அறிவித்ததற்கிணங்க, ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் குறள் வார விழா கொண்டாட்டங்கள்! 38 மாவட்டங்களிலும் குறள் ஓவியம், குறள் ஒப்பித்தல், இசை நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள், தமிழோசை, அரசு ஊழியர் - ஆசிரியர் பங்குபெறும் குறளாசிரியர் மாநாடு, வினாடி வினா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இவற்றைத் 'திருக்குறள் திருவிழா - தமிழர்களுக்குத் தெவிட்டாத பெருவிழா' என்ற பெருமிதத்துடன் தொடங்கி வைத்தேன். வள்ளுவம் போற்றுதும்!,
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b