Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.)
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்தவாரம் ஜனவரி 15 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக சென்னை மற்றும் பிற ஊர்களில் பணிபுரிவோர், கல்வி பயில்வோர், வியாபாரம் செய்வோர் என அனைத்து தரப்பட்ட மக்களும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அந்தவகையில் பயணிகளின் நலன் கருதி போக்குவரத்து துறை சார்பில் இந்தாண்டு பொங்கல் பண்டிக்காக சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 10,245 சிறப்பு பேருந்துகள் என ஒட்டுமொத்தமாக 22,797 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 11,290 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 34,087 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம், கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையம், கோயம்பேடு மற்றும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது வரை 1.27 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகள் மூலம் இதுவரை பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்து துறையின் சார்பில், 2026ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 614 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மொத்தம் 2,706 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,21,770 பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், இதுவரை சென்னையிலிருந்து 1,16,977 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் திருநாள் பயண காலத்தில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். எனவே பணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பணிக்க கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b