Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 11 ஜனவரி (ஹ.ச.)
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
தென்காசி மாவட்டம் கடையம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடற்ற வகையில் நடைபெற்று வரும் கனிமக் கொள்ளையை தடுக்க முடியாததாலும், அதன் தீமைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படாததாலும் திமுகவின் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் கடையம் சந்திரசேகர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார்.
சுயமரியாதையைக் காக்க இந்த முடிவை அவர் எடுத்திருப்பது மிகவும் சரியானது.
திமுக சுற்றுச்சூழல் அணி நிர்வாகியின் பதவி விலகலை ஒரு சாதாரணமான நிகழ்வாக பார்க்கக் கூடாது. தென் மாவட்டங்களில் கட்டுப்பாடற்ற வகையில் கனிமக் கொள்ளை நடக்கிறது; அதை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போராட வேண்டிய திமுக நிர்வாகியாலேயே தடுக்க முடியவில்லை; கனிமக் கொள்ளை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திமுக நிர்வாகியே புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல செய்திகளை இந்த ஒற்றை பதவி விலகல் கடிதம் கூறுகிறது.
தென் மாவட்டங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கனிமக் கொள்ளை நடைபெறுகிறது; ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படுகின்றன; கனிமக் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு காட்பாதராக இருந்து திமுகவின் பெரும்புள்ளி ஒருவர் பாதுகாக்கிறார் என்று பல ஆண்டுகளாக நான் குற்றஞ்சாட்டி வருகிறேன். அவை அனைத்தும் உண்மை என்று இப்போது திமுக நிர்வாகியின் வாக்குமூலத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நலனிலும், இயற்கை வளங்களின் நலனிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அக்கறை இருக்கிறதா? என்பதை நிரூபிப்பதற்கான நேரம் வந்து விட்டது.
இனியாவது கனிமக் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது அவர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை வாக்கு என்னும் ஆயுதத்தைக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிப்பார்கள்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam