Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 ஜனவரி (ஹி.ச)
திமுக அரசால்
பாதிக்கப்படாதவர்களே இல்லை, ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட திமுக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சி செயலாளர்களில் பெரும்பான்மையினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். தொடக்கத்தில் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட அவர்கள், தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 2006-ஆம் ஆண்டில் ரூ.1,300 அடிப்படை ஊதியத்தில் பணி நிலைப்பு செய்யப்பட்டு 2018-ஆம் ஆண்டு முதல் ரூ.15,900 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது எந்த வகையிலும் நியாயமல்ல.
ஊராட்சி செயலாளர்களுக்கு இணையான ஊதியம் பெற்று வரும் ஊராட்சி ஒன்றிய பதிவுறு எழுத்தர்களுக்கு அவர்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வூதியம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அதே ஊதிய விகிதம் பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பதும், ரூ.2000 மட்டுமே ஓய்வூதியம் வழங்குவதும் பெரும் அநீதியாகும்.
ஊரக உள்ளாட்சிகளின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் ஊராட்சி செயலாளர்கள் தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் 28 மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், அனைத்துப் பணிகளையும் ஊராட்சி செயலாளர்கள் தான் கவனித்து வருகின்றனர். கடந்த 6 நாள்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஊராட்சிகளில் முக்கியமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அது குறித்த எந்தக் கவலையும், அக்கறையும் இல்லாமல் இந்த சிக்கலுக்கு தீர்வு காணாமல் அலட்சியம் காட்டி வருகிறது.
தமிழ்நாட்டில் எந்தெந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று கணக்கெடுக்கவே முடியாத அளவுக்கு ஏராளமான அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதை வைத்துப் பார்க்கும் போது திமுக ஆட்சியால் பாதிக்கப்படாதவர்களே இல்லையோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், இதுகுறித்த கவலையே இல்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு விழித்துக் கொண்டு ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்; அதன் மூலம் அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Hindusthan Samachar / P YUVARAJ