Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 11 ஜனவரி (ஹி.ச.)
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நாள்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
அந்தவகையில் மார்கழி மாதத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளக்கும் லீலையைக் குறிக்கும் வகையில் நடைபெறும் அஷ்டமி சப்பர விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்விழாவில் கலந்துகொள்ள பெண்கள் அதிக அளவில் திரண்டு வருவார்கள்.
மார்கழி மாதத் தேய்பிறை அஷ்டமி நாளான இன்று (ஜனவரி 11) சுவாமிக்கும் அம்மனுக்கும் அதிகாலையில் பல்வேறு சிறப்புப் பூஜைகள், அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை 5 மணிக்கு கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும் மீனாட்சியம்மனும் தனித் தனி சப்பரங்களில் எழுந்தருளினர்.
சிவனடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க கீழமாசி வீதியிலிருந்து புறப்பட்ட சப்பரமானது யானைக்கல், கீழ வெளி வீதி, தெற்குவெளிவீதி, மேலவெளிவீதி வழியாகச் சென்றது.
இந்தத் திருவிழாவில் மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பர வடத்தினைப் பெண் பக்தர்கள் மட்டுமே பிடித்து இழுத்துச்சென்றனர்.
நான்கு வெளி வீதிகளிலும் வலம் வந்த சுவாமி, அம்மனை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
சப்பரத்தின் முன்பாக சிவாச்சாரியார்கள் அரிசியைத் தூவியபடி செல்லும்போது கீழே சிதறிக்கிடந்த அரிசியை பக்தர்கள் எடுத்துக் கொண்டனர். இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், நோய்,பசிப்பிணி நீங்கும் என்பது நம்பிக்கை.
மதுரை மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனர்.
சப்பரத் தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, பல்வேறு அமைப்பினர்களும் இனிப்புகளையும், சிற்றுண்டிகளையும் வழங்கினார்கள்.
Hindusthan Samachar / vidya.b