இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.) இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வ
Cmpm


சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.)

இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளர்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்று கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விஷயம் குறித்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது என்றும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருவது தனது கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துரைக்கும் விரிவான கோரிக்கைகளை தாம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் அவர்களின் உண்மையான உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சகித்து வந்துள்ளனர் என்றும், பலர், இதனைதங்கள் சமூகத்திற்கு எதிரான இனப்படுகொலை என்று விவரிக்கும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருத்தத்தோடு சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் அரசியலமைப்புகள் (1947, 1972, மற்றும் 1978 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள்) அனைத்தும் ஒரு ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்தன என்றும், இது திட்டமிட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்துள்ள அவர், உள்நாட்டுப் போர் முடிவடைந்த கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பு. பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள்தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள் மற்றும் தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து வழிவகுத்து வருவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான, பாராளுமன்றத்தில் முழுப்பெரும்பான்மையைக் கொண்ட தற்போதைய இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினைகளைத் தீர்க்கும் போர்வையில் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஒரு ஒற்றையாட்சி எக்கியராஜ்ய (ஒற்றையாட்சி அரசு) மாதிரியை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது என்றும், இது அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் நியாயமான எண்ணங்களைப் புறக்கணித்து, அதன்மூலம் அவர்களை மேலும் ஒரங்கட்டி,அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில், இந்திய அரசால் பூட்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட 1985 அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாடுகளில் (Thimpu Principles) குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளையே, தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில்,

இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்);

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது(தமிழர் தாயகம்);

தமிழ் தேசத்திற்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல் (தமிழர் தன்னாட்சி உரிமை); மற்றும்

மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும், பாகுபாடின்மையையும் உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல்

போன்றவற்றையே இந்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இந்தக் கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும்எந்தவொரு புதிய அரசியலமைப்பும்,அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும் என்றும், இது மீண்டும் மோதல்களுக்கும், மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் உட்பட, வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் அவல நிலை, தமிழ்நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், இலட்சக்கணக்கான மக்கள், அங்குள்ளவர்களைத் தங்கள் உறவினர்களாகக் கருதுகின்றனர் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு சரிவும் இருதரப்பு உறவுகளுக்கும், இரு நாடுகளுக்கிடையேயான உறுதிப்பாட்டிற்கும் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களின் குறைகளை உண்மையாக நிவர்த்தி செய்யும் ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், குறிப்பாக, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யும்; இனச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும்; மற்றும் பன்முகத்தன்மை, சமத்துவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் கூட்டாட்சி முறையை

உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அணுகுமுறை, பிராந்திய அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியாவின் பங்கை மதிப்பது மட்டுமல்லாமல், கூட்டாட்சி மற்றும் மொழி மற்றும் இனச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது குறித்த நமது அரசியலமைப்பு விழுமியங்களுடனும் ஒத்துப்போகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்கு அது பங்களிக்கும் என உறுதியாக தான் நம்புவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் தான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ