Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.)
கடந்த 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, கிராமப்புற மக்கள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை செய்யும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை கொண்டு வந்தது.
வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் வறுமையை ஒழிக்கவும் இந்த சட்டத்தை அப்போதைய மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலம், ஒரு நபர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை செய்வதற்கான உத்தரவாதத்தை அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தொழிலாளர்களாக உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை மாற்றம் செய்து ‘விக்ஸித் பாரத் - ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) (VB - G RAM G) மசோதா - 2025 ’ என்ற பெயரில் புதிய திட்டத்தை கொண்டு வந்தது.
இந்த திட்டத்தில் மூலம், 100 நாட்கள் வேலை என்பதை 150 நாட்களாக மாற்றிருந்தாலும் 90% நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கி வந்த நிலையில் இனி 60% மட்டுமே வழங்கும் என சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
மேலும், மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தின் பெயரை மாற்றிவிட்டு விபி ஜி-ராம்-ஜி என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த புதிய திட்டத்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசு பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து இன்று (11-01-26) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக மத்திய அரசை எதிர்த்து ஒவ்வொரு மாநிலத்திலும் இன்று காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானதில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பட்டன.
Hindusthan Samachar / vidya.b