Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.)
லேப்டாப், டெஸ்க்டாப், மினி பி சி என கணினி உலகில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திவரும் எச்பி நிறுவனம், இந்த முறை முற்றிலும் வித்தியாசமான தயாரிப்பாக, ஒரு முழு கணினி போலவே செயல்படும் கீபோர்டு ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
எச்பி எலைட்போர்டு ஜி1ஏ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த கீபோர்டு, பார்ப்பதற்கு சாதாரண கீபோர்டு போல தோன்றினாலும், அதன் உள்ளே ஒரு சக்திவாய்ந்த PC-யே மறைந்திருக்கிறது என்கிறார்கள்.
இந்த புதிய எச்பி எலைட்போர்டு ஜி1ஏ, ஏஐ அம்சங்களுடன் கூடிய கீபோர்டாகும். இதில், பிராசஸர், ரேம், எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், ஃபேன், ஸ்பீக்கர்கள் மற்றும் வைஃபை ஆதரவு என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அதாவது, ஒரு மானிட்டருடன் இந்த கீபோர்டை இணைத்தால், இது முழுமையான கணினி அனுபவத்தையே வழங்கும்.
கீபோர்டு பி சி என்றால் என்ன?
இன்று வரை, ஐமேக் போன்ற ஆல்-இன்-ஒன் கணினிகளில் டிஸ்ப்ளேயின் உள்ளே ஹார்டுவேர் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், எலைட்போர்டு ஜி1ஏ-இல், கணினி ஹார்டுவேர் முழுமையாக கீபோர்டுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
எனவே, இதனை வெளிப்புற மானிட்டருடன் இணைத்தால், லேப்டாப் போன்ற வேறு எந்த சாதனங்களும் இல்லாமல், கைக்குள் அடங்கும் ஒரு பி சி போலவே இதனை பயன்படுத்தலாம் என்பதே எச்பி நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.
மேலும், இந்த கீபோர்டு மாடுலர் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் கீபோர்டில் உள்ள கீகளைத் தங்களுக்கேற்றவாறு மாற்றிக் கொள்ள முடியும். அதோடு, ரேம், எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் மற்றும் யூனிட்டின் கீழ் இயங்கும் வைஃபை அடாப்டர் போன்ற முக்கிய அம்சங்களையும் தேவைக்கேற்ப மேம்படுத்திக் கொள்ள முடியும்.
எச்பி நிறுவனம், எலைட்போர்டு ஜி1ஏ கீபோர்டை இரண்டு விதமான கான்பிகரேஷன்களில் வழங்க திட்டமிட்டுள்ளது. உயர் செயல்திறன் தேவைப்படும் பயனர்களுக்கு, ஏஎம்டி ரைசன் ஏஐ 7 350 ப்ரோ சிப்செட்டுடன், 64GB வரையிலான ரேம், 2TB எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உடனும், சாதாரண பயனர்களுக்கான பதிப்பில், ரைசன் ஏஐ 5 330 பிராசஸர், 32GB வரையிலான பேஸ் ஸ்டோரேஜும் உள்ளதாக கூறப்படுகிறது.
பேட்டரி மற்றும் பயன்பாடு
சிபியு இடம் பெற்றிருக்கும் சாதனம் சூடாகுவது இயல்பானதுதான் என்பதால், அதனை சமாளிக்க, எலைட்போர்டு ஜி1ஏ கீபோர்டில் ஃபேன் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இது வெப்பத்தை திறம்பட வெளியேற்றுவதால், டைப் செய்யும்போது கீகளில் எந்த அசௌகரியமும் ஏற்படாது என எச்பி நிறுவனம் உறுதி அளிக்கிறது.
மேலும், இந்த ஏஐ கீபோர்டு பி சி-க்கு, பேட்டரி பதிப்பும் உள்ளது. தொடர்ச்சியான பயன்பாட்டில் 3 மணி நேரத்திற்கும் மேல் மற்றும் செயலற்ற நிலையில் 2 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் என நிறுவனம் தெரிவிக்கிறது.
எனவே, எலைட்போர்டு ஜி1ஏ என்பது வித்தியாசமான கீபோர்டு மட்டுமல்ல. இது, எதிர்காலத்தில் கணினிகள் எவ்வளவு சுருங்கிய, ஒருங்கிணைந்த வடிவில் வரக்கூடும் என்பதற்கான ஒரு முன்மாதிரியாகவே பார்க்கப்படுகிறது.
இந்த கீபோர்டு சந்தையில் எப்போது கிடைக்கும், அதன் விலை என்ன என்பது பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இருப்பினும், ஒரு கீபோர்டு முழு கணினியாக மாறும் நாள் வந்துவிட்டது என்பதை எச்பி நிறுவனம் இந்த தயாரிப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM