Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக வரும்,போகிப் பண்டிகையின் போது, அனைவரும் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வீட்டுக்கு வெளியே தெருக்களில் போட்டு எரிப்பது வழக்கமாக உள்ளது.
அதைப்போல் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல் பஜார், பொழிச்சலூர், பம்மல் அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், போகிப் பண்டிகையை ஒட்டி பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள், உள்ளிட்ட பழைய பொருட்களை தெருக்களில் போட்டு, அதிகாலையில் எரிப்பதால், கடுமையான புகைமூட்டங்கள் ஏற்பட்டு, சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியை சூழ்ந்து கொள்கின்றன.
அதோடு பனிமூட்டமும் அதிகாலை நேரத்தில் இருப்பதால், ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படுகிறது.
இதனால் சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதில் அதிகபட்சமாக, கடந்த 2018 ஆம் ஆண்டு, 73 புறப்பாடு விமானங்கள், 45 வருகை விமானங்கள், மொத்தம் 118 விமான சேவைகள், போகிப் பண்டிகை புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டன.
அதன்பின்பு விமான சேவைகள், போகி பண்டிகையின் போது பாதிக்கப்படுவது, படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு, போகிப் பண்டிகை புகை மூட்டம் பனிமூட்டம் காரணமாக, 27 வருகை விமானங்கள் 24 புறப்படு விமானங்கள் 51 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
2025 ஆம் ஆண்டு, போகிப் பண்டிகையின் போது அதைப்போன்ற பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி, இந்திய விமான நிலைய ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாலை 4 மணியிலிருந்து, காலை 8 மணி வரையில், சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் போன்றவைகளின் நேரங்களை மாற்றி அமைத்தது. அதன்படி சுமார் 30 வருகை, புறப்பாடு விமானங்கள் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, பயணிகளுக்கு முன்னதாகவே, விமான நேரங்கள் மாற்றம் குறித்து குறுஞ்செய்தி தகவல்கள் அனுப்பப்பட்டன. இதனால் கடந்த 2025 ஆம் ஆண்டு, சென்னை விமான நிலையத்தில் போகிப் பண்டிகையின் போது, விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை.
அதைப்போல் இந்த ஆண்டும், இந்திய விமான நிலைய ஆணையம், விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு, வேண்டுகோள் விடுத்து, உள்ளாட்சி அமைப்புகள் மூலம், பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் போகிப் பண்டிகையின் அதிகாலை நேரத்தில், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள், அதிக அளவு புகைகளை எழுப்பக்கூடிய கழிவு பொருட்கள் போன்றவைகளை, தெருக்களில் போட்டு எரிப்பதை தவிர்த்து விடுங்கள். அவ்வாறு எரிப்பதால், அடர் மூடுபனியில், கரும்புகை கலந்து, விமான ஓடுபாதை தெரியாத அளவு, சூழ்ந்து கொள்கிறது. இதனால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்படுவதோடு, விமான பயணிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர்.
எனவே குடியிருப்பு பகுதி மக்கள் விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam