ஒருவரின் கருத்துடன் ஒத்துப் போகவில்லை என்பதற்காக, அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது - ஜோதிமணி கண்டனம்
சென்னை, 11 ஜனவரி (ஹி.ச) தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் மூத்த ஊடகவியலாளர் செந்தில்வேல் அவர்களை குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்திய அவமதிப்பும் ,அச்சுறுத்தலும் ஜனநாயக மரபுகளுக்கு எதிரான ஆபத்தான முன்னுதாரணமாகும் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எக்ஸ் த
Jothimani


Tw


சென்னை, 11 ஜனவரி (ஹி.ச)

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் மூத்த ஊடகவியலாளர் செந்தில்வேல் அவர்களை குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்திய அவமதிப்பும் ,அச்சுறுத்தலும் ஜனநாயக மரபுகளுக்கு எதிரான ஆபத்தான முன்னுதாரணமாகும் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஒரு விவாதம் என்பது அதில் கலந்துகொள்கிறவர்கள் தங்கள் தரப்புக் கருத்தை நாகரிகமாக முன்வைக்கிற ஒரு தளம். ஒருவருடைய கருத்தை மறுக்க இன்னொருவருக்கு அங்கே வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் பார்வையாளர்கள் என்கிற போர்வையில் அமர்ந்திருந்த பாஜகவினர் ,தொடர்ந்து செந்தில்வேலை பேசவிடாமலும், அவரை அவமதிக்கும் வகையிலும் தொடர்ந்து குறுக்கீடு செய்துள்ளனர்.

இதனால் அவர் அரங்கை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. இந்த மாதிரி பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துகொள்வது பாஜகவினுடைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் செயல்பாடு என்பது வருத்தத்திற்குரியது.

செந்தில்வேல் இதற்குமுன்பும் பாஜகவினரால் இதே போன்று அச்சுறுத்தலுக்கும், ஆபாசத் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளார். இதுபோன்ற பல ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணமதிப்பு நீக்கத்தையொட்டி மிக மோசமான ஆபாசத்தாக்குதல் எனக்கே நேர்ந்துள்ளது. இன்றும் எனது சமூக ஊடகப் பதிவுகளில் ஆபாசமான பின்னூட்டங்களை இடுபவர்கள் பெரும்பாலும் பாஜக ஆதரவாளர்களாகவே உள்ளார்கள்.

பொதுவெளியில் ,அதுவும் ஒரு பெண்ணுடைய பதிவில் ஆபாசமான பின்னூட்டங்களை இடுவது குறித்து அவர்களுக்கு,அவர்களது கட்சிக்கோ எவ்வித வெட்கமும் இல்லை. ஆபாசமாக பேசுவதன் மூலமும்,நடந்துகொள்வது மூலமும் எதிர்க்கருத்து சொல்பவர்களை முடக்கலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் அதற்கெல்லாம் பயப்படுபவர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்பது அவர்களுக்குப் புரிவதேயில்லை.

பாஜக ஆதரவாளர்களின் அநாகரிகமான அரசியல் செயல்பாடுகள் அவர்களது தலைவர்களால் தொடர்ந்து ஊக்கப்படுத்தப்படுகிறது. இது தமிழ்நாட்டு அரசியலில் மிக மோசமான ஒரு சூழலை உருவாக்கி வருகிறது.

இத்தகைய செயல்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை.

கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்தில் இயல்பானவை. ஆனால் அவை மரியாதை, நாகரிகம் மற்றும் பரஸ்பர சகிப்புத்தன்மையுடன் வெளிப்பட வேண்டும். ஒருவரின் கருத்துடன் ஒத்துப் போகவில்லை என்பதற்காக, அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது அல்லது பேசுவதற்கான உரிமையை பறிக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதும், அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவதும் பத்திரிகையாளர்களின் அடிப்படைப் பொறுப்பு. அந்தப் பணியைச் செய்யும் ஊடகவியலாளர்களை மிரட்டும் அல்லது இழிவுபடுத்தும் போக்கு அதிகரித்து வருவது, கருத்துச் சுதந்திரத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் நேரடியான சவாலாகும்.

இது ஒரே ஒரு நபருக்கு எதிரான தாக்குதல் அல்ல; சுதந்திரமான ஊடக அமைப்பின் மீது, நாகரிகமான,கண்ணியமான கருத்துப் பரிமாற்றத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில், தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் விவாத அரங்குகளில் நாகரிகமும் மரியாதையும் கட்டாயமாகப் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சுதந்திரமாக தங்கள் பணியை செய்யும் சூழலை உருவாக்குவது ஊடகங்களின் மட்டுமல்ல; சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும்.

ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமானால், கருத்து வேறுபாடுகளை வன்முறையாலும் அவமதிப்பாலும் அல்ல.

விவாதம் மற்றும் நியாயமான உரையாடல் மூலமே எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ