Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 11 ஜனவரி (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவி , மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டிற்குச் செல்லும் வழியில், முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக மணிமுத்தாறு அருவி உள்ளது.
சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலமாக உள்ளதால் மணிமுத்தாறு அருவிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும், அதிகமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆண்டு முழுவதும் தண்ணீர் அருவியில் கொட்டுவதால் தென் மாவட்ட சுற்றுலா பயணிகளின் விரும்பமான சுற்றுலா இடமாக உள்ளது.
இதற்கிடையில் மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது. குறிப்பாக நெல்லையில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
காலையில், மணிமுத்தாரு அருவிக்கு குளிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள், இந்த அறிவிப்பால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b