Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.)
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பரங்கிமலையில் இருந்து ஆதம்பாக்கம் வரை 500 மீட்டர் நீளமுள்ள மேம்பால பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது.
இந்த பணி, ஏற்கனவே இருந்த பறக்கும் ரயில் பாதையின் மேல், 2வது தளத்தில் கட்டப்பட்டதால், இடப்பற்றாக்குறை காரணமாக மிகவும் சவாலானதாகவும், அதிக நேரம் எடுத்ததாகவும் சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்சுணன் கூறுகையில்,
முதலில், பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் பாதைகளுக்கான மேம்பாலத்தை ரயில்வே துறையே கட்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், பின்னர் திட்டங்கள் மாறின. ரயில்வே துறை தங்கள் மேம்பாலத்தைக் கட்டிய பிறகு, அந்தப் பணியை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு ஒப்படைத்தது. நாங்கள் 2வது தளத்தில் எங்கள் மேம்பாலத்தைக் கட்டினோம். இந்தப் பணியின் பின்னணியில் இருந்த உழைப்பு ஒரு சவாலாகவே இருந்தது.
புறநகர் ரயில் பாதையின் மேல் அல்லது வரவிருக்கும் பறக்கும் ரயில் பாதையின் மேல் எங்கள் மேம்பாலத்தைக் கட்டுவது, மிகவும் இடப்பற்றாக்குறை உள்ள சூழலில் செய்யப்பட்டது. இது அதிக நேரம் எடுத்த ஒரு செயல்முறை. இந்தப் பகுதியை கட்டுவதற்காக, நாங்கள் ஒரு இலகுரக லாஞ்சிங் கியரை சிறப்பாக தனிப்பயனாக்கி தயாரிக்க வேண்டியிருந்தது. லாஞ்சிங் கியர் என்பது பாலத்தின் பகுதிகளைத் தூக்கி வைக்கும் ஒரு பெரிய இயந்திரம்.
கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 4 நாட்கள், நள்ளிரவு சுமார் 2 மணி நேரம், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு அப்பால் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த நேரத்தில் தான், இந்தப் பகுதியின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடமிருந்து சிறப்பு அனுமதி பெறப்பட்டது.
ரயில் பாதைகளின் மேல் கிரேன்களைப் பயன்படுத்த முடியாததால், I-கீழ்தளங்களை (I-girders -ஒரு வகை கிடைமட்ட தாங்குதளம்) அமைக்கவும், பொருத்தவும் இலகுரக லாஞ்சிங் கியர் கொண்டுவரப்பட்டது.
2ம் கட்ட திட்டத்தில் ‘U’ கீழ்தளங்களை அமைக்க பயன்படுத்தப்படும் லாஞ்சிங் கியர்கள் சுமார் 400 டன் எடை கொண்டவை. ஆனால், இந்தப் பகுதியின் வேலைத்தன்மை காரணமாக, பயன்படுத்தப்பட்ட லாஞ்சிங் கியர் 100 டன் எடை மட்டுமே கொண்டது. I- கீழ்தளங்களுக்கு இதுதான் முதல் முறை பயன்படுத்தப்பட்டது.
வழக்கமாக, 2ம் கட்ட திட்டத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்ட கட்டுமானப் பகுதிகளை பயன்படுத்தும். ஆனால், இந்தப் பகுதியில் ஒரு விதிவிலக்கு செய்யப்பட்டது. நாங்கள் ‘காஸ்ட்-இன்-சிட்டு போர்ட்டல்’ எனப்படும் ஒரு முறையை பயன்படுத்தினோம். இது ஒருவகை கட்டமைப்பு அல்லது சட்டகம் ஆகும். இந்த சட்டகங்கள் தளத்திலேயே, துண்டு துண்டாக இணைக்கப்பட்டன.
பறக்கும் ரயில் பாதையின் ஏற்கனவே உள்ள தூண்களிலிருந்து கட்டமைப்பு ஆதரவை பெறும் ஒரு தனித்துவமான தொங்கும் ஆதரவு அமைப்பை நாங்கள் உருவாக்கினோம்.
தற்போது சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயில் சேவை, பரங்கிமலை வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்காக புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் பரங்கிமலை ஆகிய 3 புதிய நிலையங்கள் கட்டப்படுகின்றன. இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு, எதிர்காலத்தில் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்.
தரைத்தளத்தில் புறநகர் ரயில்கள், முதல் தளத்தில் பறக்கும் ரயில்கள், மற்றும் 2வது தளத்தில் மெட்ரோ ரயில்கள் என 3 அடுக்கு போக்குவரத்து முறை, பயண நேரத்தைக் குறைத்து, நகரின் பல்வேறு பகுதிகளுக்கு எளிதாகச் செல்ல வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b