Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.)
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் அருகில் பகுதி நேர ஆசிரியர்கள் இன்று நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தல் வாக்குறுதி எண் 181 ல் தெரிவித்தது.
ஆனால் ஆட்சி பொறுப்பேற்று, ஐந்தாண்டுகள் முடிவடையும் தருவாயிலும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதன் காரணமாக பகுதி நேர ஆசிரியர்கள் சொற்ப சம்பளத்தில் பணி நிரந்தரம் இல்லாமல் வாழ்வாதாரத்திற்கு சிரமப்படும் சூழலில் உள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து, சென்னை டிபிஐ வளாகத்தின் அருகில் நான்காவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்தனர். அதில் குறிப்பாக இறந்ததை போல் பகுதி நேர ஆசிரியர் மாலையோடு கிடக்க... மாற்ற ஆசிரியர்கள் ஒப்பாரி வைத்து, நூதன முறையில் போராட்டம் செய்தனர்.
சொந்தக்காரர்களின் ஈம சடங்குகளுக்கு கூட செலவழிக்க தங்களிடம் பணம் இல்லை என்றும், நல்லது கெட்டது என எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்ல முடியாத சூழலில் உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர்
பொங்கல் நெருங்கும் தருவாயிலும் போராட்ட களத்தில் இருப்பதாகவும், குடும்பத்தில் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டியும் தீவிரமாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்த பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்வோம் என அரசாணை வெளியிடும் வரை இந்த இடத்தை விட்டு அகல மாட்டோம் என கூறினர்..
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam