Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 11 ஜனவரி (ஹி.ச.)
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட செட்டிகுளம் அருகே உள்ள நாட்டார் மங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் ஏற்பட்ட விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல் உடைக்கும் பணிக்காக வெடி வைக்கப்பட்ட போது திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய சக்கரவர்த்தி என்ற தொழிலாளி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் இரவு நேரத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. குவாரியில் வழக்கம்போல் பாறைகளை உடைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வெடி வைக்கப்பட்டதும் எதிர்பாராத விதமாக மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.
அப்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சக்கரவர்த்தி மண்சரிவில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சக தொழிலாளர்கள் அவரை மீட்க முயன்றாலும், பாறைகள் மற்றும் மண் அதிக அளவில் சரிந்து விழுந்ததால் முயற்சி தோல்வியடைந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் இரவு கடுமையான மழை பெய்ததாலும், முழுமையான இருள் சூழ்ந்திருந்ததாலும் மீட்புப் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு தீயணைப்பு துறையினர் தற்காலிகமாக மீட்புப் பணியை நிறுத்தி விட்டு திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் பெரிய அளவிலான பாறைகள் இடுக்குகளில் சிக்கி இருப்பதால், மனிதர்களால் நேரடியாக சென்று மீட்புப் பணியை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கிட்டாச்சி JCP போன்ற கனரக இயந்திரங்கள் கொண்டு பாறைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மீட்புப் பணியின் போது மேலும் ஒரு பெரிய பாறை சரிந்து விழுந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் மீட்பு நடவடிக்கையில் தற்காலிக தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து மண் சரிவதற்கான அபாயம் இருப்பதால், மிகுந்த கவனத்துடன் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்த சக்கரவர்த்தி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN