Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 11 ஜனவரி (ஹி.ச.)
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் எதிர்வரும் ஜனவரி
26-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துவார்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் தலைவர்கள், பல்வேறு துறைகளின் சாதனையாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம், கூடலூர் சளிவயல் நெல்லிகுன்னு பகுதி தேயிலை தோட்டத் தொழிலாளரான இந்திராணி, அங்குள்ள தனியார் எஸ்டேட்டில் பணியில் இருந்த போது, தபால் துறை ஊழியர் சந்தித்து, 'குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வந்திருப்பதாக கூறி, அதற்கான அழைப்பிதழை அவரிடம் வழங்கினார்.
இந்திராணி இன்ப அதிர்ச்சியுடன் அழைப்பிதழை பெற்றுக்கொண்டார்.
இது குறித்து இந்திராணி கூறுகையில்,
நான் கூடலூர், சளிவயல் கிராமத்தில் நெல்லிகுண்ணு பகுதியில் வசித்து வரும் ஒரு சாதாரண தேயிலை தோட்ட தின கூலி தொழிலாளி.
எனக்கு ஜனாதிபதியிடம் இருந்து குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் வந்துள்ளது.
மிகவும் பின்தங்கிய கடைக்கோடி பகுதியில் வசிக்கும் எனக்கு, ஜனாதிபதியிடம் இருந்து, தபால் மூலம் அழைப்பிதழ் வந்திருப்பது வியப்பாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் உள்ளது.
என்று கூறினார்.
அவருக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b