1,000 ஆண்டுகளுக்குப் பிறகும், சோமநாதரின் கொடி இன்றும் உயர்ந்து பறக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்
ஆமதாபாத், 11 ஜனவரி (ஹி.ச.) குஜராத் மாநிலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பிரபல சோம்நாத் மகாதேவ கோவிலுக்கு இன்று (ஜனவரி 11) காலை சென்றார். அங்கு பிரதமர் மோடி இன்று காலை 9.45 மணியளவில் பூஜைகள் செய்து, சாமி தரிசனம் மேற்கொண
1,000 ஆண்டுகளுக்குப் பிறகும், சோமநாதரின் கொடி இன்றும் உயர்ந்து பறக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்


ஆமதாபாத், 11 ஜனவரி (ஹி.ச.)

குஜராத் மாநிலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பிரபல சோம்நாத் மகாதேவ கோவிலுக்கு இன்று (ஜனவரி 11) காலை சென்றார். அங்கு பிரதமர் மோடி இன்று காலை 9.45 மணியளவில் பூஜைகள் செய்து, சாமி தரிசனம் மேற்கொண்டார்.

இதன்பின்னர் சோம்நாத் கோவிலில் இருந்து புறப்பட்ட சவுரியா யாத்திரையில் அவர் பங்கேற்றார்.

1,000 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக சோம்நாத் கோவில் தாக்கப்பட்டபோது, எதிர்த்து போராடி உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் 108 குதிரைகள் முன்னே செல்ல இந்த யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. 1,026-ம் ஆண்டு இந்த கோவில் மீது முதல் தாக்குதல் நடந்தது. இந்நிலையில், முதல் தாக்குதல் நடந்து 1,000 ஆண்டுகள் முடிந்த வரலாறை குறிக்கும் வகையில் நடந்து வரும் சவுரியா யாத்திரையில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து சோமநாதர் சுயமரியாதை விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சோமநாதரின் வரலாறு என்பது அழிவு மற்றும் தோல்வியின் வரலாறு அல்ல, அது வெற்றி மற்றும் புத்துணர்ச்சியின் வரலாறு. இது காலத்தின் சுழற்சி. அடிப்படைவாத படையெடுப்பாளர்கள் இப்போது வரலாற்றின் பக்கங்களாக சுருக்கப்பட்டுவிட்டனர், ஆனால் சோமநாதர் கோவில் இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

பல நூற்றாண்டுகளாக பலமுறை அழிக்கப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சோமநாதர் கோவ்ல் இன்று மீள்தன்மை, நம்பிக்கை மற்றும் தேசியப் பெருமையின் சக்திவாய்ந்த சின்னமாக கம்பீரமாக நிற்கிறது. இது, கோவிலை அதன் பழங்காலப் பெருமைக்கு மீட்டெடுப்பதற்கான கூட்டுத் தீர்மானம் மற்றும் முயற்சிகளால் சாத்தியமானது.

வெறுப்பு, அட்டூழியம் மற்றும் பயங்கரவாதத்தின் உண்மையான வரலாறு நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.

அந்தத் தாக்குதல் கோவிலை கொள்ளையடிப்பதற்கான ஒரு முயற்சி என்று நமக்குக் கற்பிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, சர்தார் வல்லபாய் படேல் சோமநாதர் கோவிலை மீண்டும் கட்டும் சபதத்தை மேற்கொண்டபோது, அவரது பாதைக்கு தடைகள் ஏற்பட்டன.

சமாதானப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டவர்கள், தீவிரவாத மனப்பான்மை கொண்ட அத்தகைய நபர்களுக்கு முன்னால் மண்டியிட்டனர்.

சோமநாதர் கோவிலின் புனரமைப்புக்குத் தடை ஏற்படுத்த முயன்ற அந்தச் சக்திகள் இன்றும் நம்மிடையே இருக்கின்றன. அத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க நாம் விழிப்புடனும், ஒற்றுமையுடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும்.

சோமநாதரின் கதைதான் இந்தியாவின் கதை.. இந்த கோவிலைப் போலவே, அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவை பலமுறை அழிக்க முயன்றனர். கோவிலை அழித்ததன் மூலம் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அந்த படையெடுப்பாளர்கள் நினைத்தார்கள்.

ஆனால், 1,000 ஆண்டுகளுக்குப் பிறகும், சோமநாதரின் கொடி இன்றும் உயர்ந்து பறக்கிறது. 1,000 ஆண்டுகால இந்த போராட்டத்திற்கு உலக வரலாற்றில் இணையே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் நாளை

(ஜனவரி 12) ஆமதாபாத்தில் ஜெர்மன் பிரதமர் பிரெடெரிக் மெர்சை வரவேற்று பல்வேறு இருதரப்பு நிகழ்வுகளை பிரதமர் மோடி நடத்த உள்ளார்.

பிரதமரின் சுற்றுப்பயணத்தையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / vidya.b