Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 11 ஜனவரி (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் என்பதால் இன்று அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது, அதுமட்டுமல்லாமல் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாரதனை நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று இரவு முதல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர், இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தற்போது சாமி தரிசனம் செய்து வருகின்றனர், ராஜகோபுரம் வழியாக இலவச தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் 4 முதல் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர், அதேபோன்று 50 ரூபாய் தரிசன கட்டணத்தில் அம்மனி அம்மன் கோபுரம் வழியாக வரக்கூடிய பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் வருகின்ற பக்தர்களின் வசதிக்காக குடிதண்ணீர் நீர்மோர் உள்ளிட்ட பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்பதால் காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் ஃகியூ லைன் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியே செல்லும் பக்தர்கள் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மலையை சிவனாக எண்ணி அஷ்ட லிங்கங்களையும் வழிபட்டு கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN