Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.)
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் தமிழால் இணைவோம், தரணியால் உயர்வோம் என்ற கருப்பொருளோடு இருநாட்கள் நடைபெறும் அயலகத் தமிழர் தினம் - 2026 விழாவினைத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக உணவு சார்ந்த அரங்குகள், கலாசாரம் சார்ந்த அரங்குகள், வணிகம் சார்ந்த அரங்குகள், கைவினைப் பொருள்கள், தமிழ் இலக்கியம் சார்ந்த 252 காட்சி அரங்குகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து அயலகத் தமிழர் தினம் சிறப்பு விழா மலரை துணை முதலமைச்சர் வெளியிட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இசைக்கருவிகளை மொரிஷியஸ் நாட்டு தமிழ்ச் சங்கத்தினருக்கு துணை முதலமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட
60க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்கள், அயலக அரசு அதிகாரிகள், தொழில்முனைவோர்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, சல்மா, திமுக அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா,
அயலகத் தமிழர் நலத்துறை வாரிய தலைவர் கார்த்திகேயன் சிவ சேனாபதி, கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மலேசிய முன்னாள் அமைச்சர் கமலநாதன், இலங்கை மாகாண முன்னாள் ஆளுநர்கள் செந்தில் தொண்டைமான், ஜீவன் தியாகராஜ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது,
வந்துள்ள அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள நீங்கள் தமிழ்நாட்டின் மீது உள்ள பாசத்தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளீர்கள், பொங்கல் என்பது தமிழ் உணர்வோடு கொண்டாடப்படும் ஒரு விழா, பொங்கல் பண்டிகையை ஒட்டி உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி என்றார்.
மேலும் பேசிய அவர் தமிழ் யாரையும் வேறுபடுத்தி பிரித்துப் பார்க்காது, யாருக்கும் எந்த வேற்றுமையையும் காட்டாத மொழி தான் நம்முடைய தாய்மொழி, ஜாதி மத பணக்கார ஏழை முதலாளி தொழிலாளி ஆண் பெண் என்று அனைத்தையும் தாண்டி நம்மை இணைத்து இருப்பது நம்முடைய தாய் மொழி தமிழ், அப்படி அனைவரும் தமிழால் இணைந்ததால் தான் இன்று தரணியை வென்று கொண்டுள்ளோம் என கூறிய அவர்
சுமார் 32 ஆயிரம் பேர் அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர், அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் உங்களுக்கு கொடுக்கப்படும் அடையாள அட்டை தான் தாய் வீட்டு சீதனம் என கூறினார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நம்முடைய முதலமைச்சர் வெளிநாடு செல்லும் பொழுதெல்லாம் உங்களை சந்தித்து வருகிறார்கள், இன்று இந்தியாவில் பொருளாதாரத்தில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது அதற்கு உங்களுடைய பங்கு மிகப் பெரியது என கூறிய அவர் நம்முடைய மொழி கலாச்சாரம் பண்பாட்டை மறந்துவிடக்கூடாது, அரசின் சார்பாக உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திட்டத்தை முதல்வர் அறிமுகம் செய்து உள்ளார், அயலகத் தமிழர்களும் உங்களுடைய கனவுகளை சொல்லலாம், உங்களுக்குத் தேவையான திட்டங்களை முதலமைச்சர் நிச்சயம் தீட்டி கொடுப்பார் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ