கார் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!
வேலூர், 11 ஜனவரி (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் கௌதம் (25). இவர் வேலூர் காட்பாடியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.டெக் (M.Tech) பயின்று வந்தார். அவருடன் வேலூர் சாய்நாதபுரம் பகுதியைச் சேர்ந்த நாகேஷ் எ
Road Accident


வேலூர், 11 ஜனவரி (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் கௌதம் (25). இவர் வேலூர் காட்பாடியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.டெக் (M.Tech) பயின்று வந்தார்.

அவருடன் வேலூர் சாய்நாதபுரம் பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்பவரின் மகன் கோகுல் (25) என்பவரும் அதே பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பயின்று வந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவில், இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் காட்பாடி அடுத்த அம்முண்டி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனம் மிக அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

அம்முண்டி சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது மாணவர்களின் இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தின் தாக்கத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து திருவலம் போலீசார் தெரிவிக்கையில், “மாணவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் மிகுந்த அதிவேகத்தில் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அம்முண்டி சாலையில் எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான வாகனங்களை பறிமுதல் செய்து, காரை ஓட்டிய நபரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விசாரணை முடிவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN