Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 11 ஜனவரி (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது.
இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
சதுரகிரி மலை, இயற்கை எழிலுடன் ஆன்மிக அமைதி மிக்க இடமாக திகழ்கிறது. பல சித்தர்கள் இங்கு தவமிருந்ததாக நம்பப்படுகிறது. மலையின் மீது செல்லும் பாதையில் அரிய மூலிகைகள் காணப்படுகின்றன.
பக்தர்கள் பெரும்பாலும் தாணிப்பாறை வழியாக மலையேறுகிறார்கள். இது சுமார் 7 முதல் 10 கி.மீ வரை நீளமான நடைபாதையாகும்.குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
வழக்கமாக அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷம் நாட்களில் மட்டும் பக்தர்களுக்குத் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. மேலும் மழை காலங்களில் பக்தர்கள் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கப்படாது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, பாதுகாப்பு கருதி சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இன்று (ஜனவரி 11) விடுமுறை தினம் என்பதால், பல பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்வதற்கான வருகை தந்திருந்தனர்.
ஆனால், வனத்துறையினர் தடை காரணமாக அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
Hindusthan Samachar / vidya.b