Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜனவரி (ஹி.ச.)
சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில்,
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை புரிந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக அவர் ‘ஜிராம்ஜி’ (புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்) திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த திட்டத்தின்கீழ் பயனடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பேசி, திட்டத்தின் நிறை - குறைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். இது திட்டத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான வழிகளில் ஒன்று.
ஆனால், காங்கிரஸ் கட்சியோ இந்த திட்டத்திற்கு பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பெயரை மாற்றி 125 நாட்கள் ஆன பிறகும், தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து உண்ணாவிரதம் போராட்டங்களை நடத்துகிறது. இப்படி செய்வதால் நல்ல திட்டத்தை மக்களுக்கு கிடைக்க விடாமல் அக்கட்சி தடுத்துக் கொண்டிருக்கிறது. இது மக்களை திசைதிருப்பும் முயற்சி என்றார்.
தொடர்ந்து, தணிக்கை வாரியத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர்,
கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை. அவருடைய குடும்பத்திலேயே திரைத்துறையை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். ஒரு சென்சார் போர்டு நடைமுறை என்ன என்று அவருக்கு நன்றாக தெரியும். எனவே, இதை வைத்து மக்களை திசை திருப்ப வேண்டாம்.
விஜய் திரைப்படத்திற்கு வந்துள்ள சிக்கல் என்பது இயல்பாக நடப்பதுதான். எனவே, இதுபோன்ற விவகாரங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று பதிலளித்தார்.
ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கு கேட்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் கேட்பது ராகுல் காந்திக்கு தெரியுமா, தெரியாதா? அவர்கள் கட்சிக்குள் கட்டுப்பாடு இருக்கிறதா இல்லையா? திமுக அமைச்சர் ஒருவரோ, காங்கிரஸ் கேட்பது எதையும் செய்ய நாங்கள் தயாராக இல்லை எனக் கூறியிருக்கிறார்.
இந்த விஷயங்களை பற்றி நாங்கள் ஒருபோதும் கவலைப்படவில்லை. ஏனென்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் அவர்கள் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது. அந்தக் கூட்டத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN