Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 ஜனவரி (ஹி.ச.)
கடந்த நவம்பர் 10ல், டில்லி செங்கோட்டை அருகே போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. காரை இயக்கிய டாக்டர் உமர் நபி உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் டாக்டர் உமர் நபியின் கூட்டாளிகளான பெண் டாக்டர் ஷாஹின் சையீத், டாக்டர்கள் முசாம்மில் கானே, அதிர் ராதோர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர்கள், ஹரியானாவின் பரிதாபாதில் செயல்படும் அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியது தெரிந்ததை அடுத்து, அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தினர். அப்போது, பல்கலை நிர்வாகம், மாணவர்களிடம் சட்டவிரோதமாக நிதி வசூலித்தது தெரியவந்தது.
இதையடுத்து, நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணை அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது.
பல்கலை வேந்தர் ஜாவத் அகமத் சித்தீக் வீடு, அலுவலகம் உட்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், 415 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், கடந்தாண்டு நவம்பரில் ஜாவத் அகமது சித்திக்கை கைது செய்தனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக பெறப்பட்ட நிதியில், அல் பலாஹ் பல்கலை, பரிதாபாதில் உள்ள தவுஜ் என்னும் இடத்தில் புதிய கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத் துறை சந்தேகித்துள்ளது.
சட்டவிரோதமாக பெறப்பட்ட நிதியின் வாயிலாக சேர்த்த அசையும், அசையா சொத்துக்களை கணக்கிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
இதன் முடிவில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அந்த கட்டுமானப் பணிகளை நிறுத்தவும், அல் பலாஹ் பல்கலை சொத்துக்களை முடக்கவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணை நீடிக்கும் குற்றச் செயல்களின் வருவாய் சிதறடிக்கப்படாமலோ, விற்கப்படாமலோ அல்லது பரிவர்த்தனை செய்யப்படாமலோ இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான விசாரணை நீடிக்கும் நிலையில், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாது என்றும், அமலாக்கத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM