Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 12 ஜனவரி (ஹி.ச.)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில்,
இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான திரு. ராபர்ட், தலைவர் திரு. ரெக்ஸ் ஆனந்தகுமார், திரு. கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து ஹவுஸ் அரஸ்ட் செய்துள்ள ஸ்டாலின் அரசு, வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு ஸ்விட்ச் ஆஃப் செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன.
சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் முதல்வர் ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து , மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam