Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜனவரி (ஹி.ச.)
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோளை ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி. - சி62 'என்ற ராக்கெட் மூலம் இன்று(திங்கள்கிழமை) இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இதில் கோ-பேசஞ்சர் செயற்கைக்கோள்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.
இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.
இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதையொட்டி ஸ்ரீஹரிகோட்டா அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்தது.
இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் இதனுடன் விண்ணுக்கு ஏவப்படுகிறது.
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV