Enter your Email Address to subscribe to our newsletters

டெஹ்ரான், 12 ஜனவரி (ஹி.ச.)
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டநிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான அந்த நாட்டின் ரூபாயான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்தது.
இதனால் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. எனவே அரசாங்கத்தை கண்டித்து நாடு முழுவதும் அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 2 வாரத்தை கடந்தும் மக்கள் போராட்டத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
போராட்டத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்தனர். 2,300 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் இறைவனுக்கு எதிரானவர்கள் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டின் நீதித்துறை அறிவித்தது.
இந்த சூழலில், ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்றும், போராட்டக்காரர்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா களமிறங்கும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில், ஈரான் உச்சதலைவர் அயதுல்லா அலி காமேனி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஈரானிய அரசாங்கம் இதைச் செய்தாலும் சரி, அதைச் செய்தாலும் சரி, போராட்டக்காரர்களுடன் சேர்ந்து கொள்வேன் என்று அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார். போராட்டக்காரர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் (டிரம்ப்) அவ்வளவு திறமையானவராக இருந்தால், அவரது நாட்டை ஒழுங்காக வழிநடத்தட்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மற்றொரு பதிவில் அவர் கூறுகையில்,
இன்று, ஈரான் தேசம் அந்தக் காலத்தில் [புரட்சிக்கு முன்பு] இருந்ததை விட இன்னும் சிறப்பாக ஆயுதம் ஏந்தியிருக்கிறது. நமது ஆன்மீக வலிமையோ அல்லது நமது பொருள் மற்றும் வழக்கமான ஆயுதங்களோ நாம் முன்பு வைத்திருந்தவற்றுடன் ஒப்பிட முடியாது.
என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM