பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயாராகும் வாடிவாசல்!
மதுரை, 12 ஜனவரி (ஹி.ச.) 2026 பொங்கல் பண்டிகை முன்னிட்டு, உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வர
Vadivasal


மதுரை, 12 ஜனவரி (ஹி.ச.)

2026 பொங்கல் பண்டிகை முன்னிட்டு, உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிகளில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்று களமாடி வருகின்றனர். இதே போல, மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக விமர்சியாக நடைபெற உள்ளது.

இதற்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு அண்மையில் நடந்து முடிந்திருந்தது. இதில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கான விண்ணப்ப பரிசீலனை, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் முடிவடையும் பட்சத்தில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான டோக்கன்கள், எண்கள் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெறும். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, பாலமேட்டில் உள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் வாடிவாசல், ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வரும் பொதுமக்கள் அமர்வதற்கான மாடம் மற்றும் 2 அடுக்கு பாதுகாப்பு வேலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதே போல, அலங்காநல்லூரில் கோட்டை முனி சுவாமி திடல், வாடிவாசல், ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் அமரும் இடம், இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கும் பணி, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அமர்வதற்கான இடம் மற்றும் அவர்களுக்கான 2 அடுக்கு பாதுகாப்பு வேலிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அலங்காநல்லூரில் ஜனவரி 15- ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கும் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் மு. க. ஸ்டாலினும், பாலமேட்டில் ஜனவரி 16- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தொடங்கி வைக்க உள்ளனர்.

இதே போல, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு கார், பைக், ரொக்க பணம், கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.

இதற்காக, ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் தீவிரமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் பகுதியில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN