Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 12 ஜனவரி (ஹி.ச.)
சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு கேரள உயர் நீதிமன்ற வழிகாட்டூதலின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மகரஜோதிக்கு முந்தைய தினமான ஜனவரி 13 ல் 35 ஆயிரம் பேருக்கு விருச்சுவல் கியூ வழியாகவும் 5 ஆயிரம்பேருக்கு ஸ்பாட் புக்கிங்கிலும், ஜனவரி 14- மகரஜோதி தினத்தில் விருச்சுவல் கியூவில் 3௦ ஆயிரம் பேருக்கும், ஸ்பாட் புக்கிங்கில் 5 ஆயிரம் பேருக்கும் தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15 முதல் ஜனவரி 19- வரை தினமும் 5௦ ஆயிரம் பேருக்கு விருச்சுவல் கியூவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருவாபரணபவனி ஜனவரி 14- மாலை சன்னிதானத்தை வந்து சேரும்.
அன்றைய தினம் காலை 10:00 மணி முதல் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கும், 11:00 மணி முதல் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கும் பக்தர்கள் செல்ல முடியாது. திருவாபரண பவனி சன்னிதானம் வந்து சேர்ந்த பின்னரே பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப்படுவர்.
பம்பை ஹில்டாப்பில் ஜனவரி 12 காலை 8:00 மணி முதல் மதியம் 12:0௦ மணி வரை தனியார் வாகனங்கள் பார்க்கிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கு கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்களும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வந்துள்ள வாகனங்களும் நிறுத்தப்படும். தனியார் வாகனங்கள் நிலக்கல்லில் பார்க்கிங் செய்ய வேண்டும்.
ஜனவரி 13 மாலை 6:00 மணிக்கு பின்னர் எருமேலியில் இருந்து பெருவழிப்பாதையிலும், அழுதை கடவில் இருந்து 14ம் காலை 8:00 மணி முதலும், முக்குழியில் இருந்து 14 காலை 10:00 மணிக்கு பின்னரும் பக்தர் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஜனவரி 14- மாலை 4 மணிக்கு பின்னர் புல் மேட்டில் இருந்து பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது. அவர்கள் புல் மேட்டில் மகரஜோதி தரிசனம் முடித்துவிட்டு காட்டுப்பாதை வழியாக சன்னிதானம் வர அனுமதி இல்லை. அங்கிருந்து அவர்கள் திரும்பி சத்திரம் வழியாகவோ, வள்ளக்கடவு வழியாகவோ சென்று சன்னிதானம் வர வேண்டும்.
காட்டுப்பகுதிகளில் குடில்கள் கட்டி ஜோதி தரிசனத்திற்கு காத்திருக்க, சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை கண்காணிக்க தனி போலீஸ் படை நியமிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM