Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீஹரிகோட்டா, 12 ஜனவரி (ஹி.ச.)
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ள பாதுகாப்புத் துறை பயன்பாட்டுக்கான இஓஎஸ்-என் 1 (அன்விஷா) எனும் அதிநவீன செயற்கைக்கோளும் ஏவப்பட்டுள்ளது.
பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.18 மணியளவில் 16 செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஏவியுள்ளது.
இஓஎஸ்-என் 1 (அன்விஷா) செயற்கைக்கோளுடன் இந்திய மற்றும் வெளிநாடுகளுக்குச் சொந்தமான 15 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
முதன்மைச் செயற்கைக்கோளான இஓஎஸ்-என் 1, தரையில் இருந்து 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கான சேவைகளை அது வழங்கும். மேலும், விவசாயம், நகர்ப்புறத் திட்டமிடல், சுற்றுச்சூழல் ஆய்வு நடவடிக்கைகளுக்கும் இந்தச் செயற்கைக்கோள் உதவும்.
பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ள மற்ற செயற்கைக்கோள்களில் ஆயுள்சாட், சென்னையைச் சேர்ந்த ஆர்பிட்எய்டு எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்தது.
இது புவிவட்டப் பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோளில் மீண்டும் எரிபொருள் நிரப்புதல் குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
இதைத் தவிர, ஸ்பெயின் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய கிட் எனப்படும் சிறிய விண்கலமும் அனுப்பப்பட்டுள்ளது. அதைப் பூமிக்கு மீண்டும் தரையிறக்கும் சோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM