கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொலை - டிடிவி தினகரன் கண்டனம்!
சென்னை, 12 ஜனவரி (H.S.) அமமுக பொதுச் செயலாளர் டி‌டிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி சரமாரி வெட்டி படுகொலை – சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கத் தவறிய காவல்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத
Pasumpon TTV Dhinakaran


சென்னை, 12 ஜனவரி (H.S.)

அமமுக பொதுச் செயலாளர் டி‌டிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில்,

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி சரமாரி வெட்டி படுகொலை – சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கத் தவறிய காவல்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியைப் பார்க்க வந்த ரவுடி ஒருவர், மருத்துவமனைக்குள்ளாகவே அடையாளம் தெரியாத கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளாகவே நடைபெற்றிருக்கும் இக்கொடூரச் சம்பவம் அங்கு வரும் நோயாளிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை, அலட்சியப் போக்குடன் செயல்படுவதே, தற்போது அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்யும் அளவிற்கான அசாதாரண சூழலைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ளது.

எனவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து படுகொலை செய்த கும்பலைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி, அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN