Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 ஜனவரி (ஹி.ச)
பொங்கல் திருநாளையொட்டி பன்மடங்கு உயர்ந்திருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தால் பயணிகள் பாதிப்பு – ஆண்டுதவறாமல் தொடரும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த தவறிய போக்குவரத்துத்துறையின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாட சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் பலர் அவரவர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் நிலையில், பன்மடங்கு அதிகரித்திருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் 700 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாகவும், கோவைக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும், நெல்லைக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 1400 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாகவும் உயர்ந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
பொங்கல் திருநாள் மட்டுமல்ல ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் திட்டமிட்டு பன்மடங்கு உயர்த்தப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் கண்டுகொள்ளாத போக்குவரத்துத் துறையால், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதோடு, சிலர் தங்களின் பயணங்களை ரத்து செய்யும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டையில் இறங்கியிருக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் நாட்களில் இதுபோன்ற கட்டணக் கொள்ளை நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு நடவடிக்கையையும் தீவிரப்படுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ