Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 12 ஜனவரி (ஹி.ச.)
விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (46), கட்டிடத் தொழிலாளி. அவரது மனைவி ராஜலட்சுமி (39). இத்தம்பதியருக்கு வைஷாலி (20), வைஷ்ணவி (17) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
வைஷ்ணவி அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பாபுவுக்கு நீண்டநாள் மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி பாபு மது அருந்திய நிலையில் வீடு திரும்பியதாக தெரிகிறது.
அப்போது வீட்டில் தனியாக இருந்த மகள் வைஷ்ணவியிடம் சாப்பாடு கேட்டார். அதற்கு அவர், எதுவும் சமைத்து வைக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனால், போதையில் இருந்த தந்தை பாபு கடும் கோபமடைந்தார்.
குடிபோதையில் மகள் மீது கொடூரத் தாக்குதல்:
தொடர்ந்து, நிதானம் இழந்த அவர், எதற்காக சாப்பாடு செய்யவில்லை எனக் கேட்டு மகளை அடித்துள்ளார்.
அதோடு, அவரது தலை முடியைப் பிடித்து இழுத்து சுவரில் மோதி, கீழே தள்ளி காலால் மிதித்தும் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. தந்தை இவ்வளவு கடுமையாக தன்னை தாக்குவார் என சற்றும் எதிர்பார்க்காத வைஷ்ணவி, நிலைகுலைந்தார்.
எனினும், ஆத்திரம் அடங்காத பாபு வைஷ்ணவியை மேலும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவர் வலியில் கத்தி துடிதுடித்துள்ளார். தொடர்ந்து, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பாபுவிடம் இருந்து அவரை காப்பாற்றினர்.
இதையடுத்து, தாக்குதலில் படுகாயமடைந்த வைஷ்ணவியை மீட்ட அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர், கணவர் குறித்து ராஜலட்சுமி அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதோடு, அவர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, படுகாயமடைந்த மாணவி வைஷ்ணவி டிசம்பர் மாதம் முதல் கடந்த 26 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், காயம் கடுமையாக இருந்ததால், சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது.
இதன் காரணமாக வைஷ்ணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN