Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து, தமிழர் திருநாளையொட்டி நாளை (ஜனவரி 14) தொடங்கவிருக்கும் ‘சென்னை சங்கமம் – 2026’ கலைவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது, ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான கலை நிகழ்ச்சிகள் நாளை (14/01/2026) மாலை 6 மணிக்கு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
சென்னை சங்கமம் கலைவிழாவை கனிமொழி எம்.பி. ஒருங்கிணைத்து வருகிறார். இந்த விழாவில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து வழங்கும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளன.
சென்னை மாநகரின் 20 இடங்களில் (15/01/2026) முதல் (18/01/2026) வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சென்னையில் ஆண்டுதோறும் தை மாதம் சென்னை சங்கமம் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. நம்ம ஊரு திருவிழா என்ற நிகழ்ச்சி சிறப்பான தொடக்க விழாவை அடுத்து, 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை,
மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, எழும்பூர் அரசு அருங்காட்சியகம். ராஜரத்தினம் விளையாட்டரங்கம்,தி.நகர் நடேசன் பூங்கா, ராஜா அண்ணாமலைபுரம் அரசு இசைக் கல்லூரி வளாகம்,கிண்டி கத்திபாரா சந்திப்பு, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா,
அசோக் நகர் மாநகராட்சி விளையாட்டு திடல், வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம். ஜாபர்கான் பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலை, பல்லாவரம் கன்டோன்மெண்ட் பூங்கா, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி மைதானம் ஆகிய 20 இடங்களில் 15.1.2026 முதல் 18.1.2026 வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளன.
'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில்' தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம்,
சேவையாட்டம்,, ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து,தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட
50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b