Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)
சென்னை காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் 898 பேருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மடிக்கணினி வழங்கினார்.
பின்னர் மேடையில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
முந்தைய ஆட்சியாளர்கள் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார்கள். ஆனால் 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லேப்டாப் திட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் லேப்டாப் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வந்த போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதை விட கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்தால் படிப்புக்கும் உதவியாக இருக்கும், வேலைக்கும் உதவியாக இருக்கும் என விரும்பினார். அதனால் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் படிக்க வேண்டும், பெண்களுக்கு கல்வி முக்கியம், பெண்களின் கல்விக்காக கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
யூடியூப் பார்ப்பதற்கும், படம் பார்ப்பதற்கும், கேம் விளையாடுவதற்கு மட்டும் லேப்டாப் பயன்படுத்தாமல் கல்லூரி மாணவர்கள் லேப்டாப்பை கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் பயன்படுத்த வேண்டும். என்றார்.
இதை தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,
நாட்டிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடும், இந்திய மாநிலங்களில் சிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலினும் திகழ்கிறார்கள். நமது மாநிலத்தில் திராவிட சிந்தனையைத் தீப்பொறியாக ஏற்றியவர் பெரியார் தான்.
பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக முதல்வர் செயலாற்றி வருகிறார்.
எங்கள் மாநில மாணவிகள் பெருமைப்பட வேண்டும். அவர்களைப் பற்றி நாங்களும் பெருமைப்படுகிறோம். அதனால் தான் பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
வடஇந்தியாவில் பெண்களை வேலைக்கு செல்ல வேண்டாம், வீட்டில் அடுப்படியில் இரு, குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். இது தான் உங்கள் வேலை என சொல்கிறார்கள்.
ஆனால், இது தமிழ்நாடு. இங்கு பெண்கள் முன்னேற்றம் தான் தமிழ்நாடு முன்னேற்றம் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN