பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நல்லம்பள்ளி சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
தருமபுரி, 13 ஜனவரி (ஹி.ச.) தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சந்தை நடைபெறுவது வழக்கம். புகழ்பெற்ற இந்த சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், மேட்டூர், சேலம், மேச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்கள
Goat Sale


தருமபுரி, 13 ஜனவரி (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சந்தை நடைபெறுவது வழக்கம்.

புகழ்பெற்ற இந்த சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், மேட்டூர், சேலம், மேச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆடுகள் வாங்கவும் விற்கவும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

அந்தவகையில் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று ஆட்டு சந்தை நடைபெற்றது.

பொதுவாக, பொங்கலுக்கு முந்தைய தினமான போகி பண்டிகை அன்று கிராமப்புறத்தில் பங்காளிகள் ஒன்று சேர்ந்து குலதெய்வ வழிபாடு செய்வார்கள்.

இந்த வழிபாட்டில் ஆடுகளை பலியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்காகவும் ஆடுகளை வாங்க அதிகளவில் ஆர்வம் காட்டுவார்கள்.

அதன்படி, நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் இன்று சுமார்

5000-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, தொப்பூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பகுதியில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு அதிக ஆடுகள் விற்பனையாகும் என்பதால் சுமார் 8000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. ஆட்டுச் சந்தை பகுதியில் ஆடுகளை வாங்க குவிந்திருந்த மக்கள் ஆடுகளை விட அதிகரித்து காணப்பட்டனர்.

மேலும் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் ஆடுகள் விலை உயர்ந்து விற்பனை ஆனது. ஒரு ஆடு 1500 முதல் 2500 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,

ஆடுகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது. இன்றைய ஆட்டு சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகள் இந்தளவு விற்பனை களைகட்டியது. அதிகாலையில் கடும் பனிப்பொழிவிலும் விறுவிறுப்பாக ஆட்டு சந்தையில் விற்பனை நடைபெற்றது என ஆட்டு வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN