Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் பரீட்சைக்கு தயாராகும் வகையில், இப்போதே முழு வீச்சில் களம் இறங்கியுள்ளன. கூட்டணி பேச்சு வார்த்தைகள் திரை மறைவில் நடந்து வருகின்றன.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் 5 மாநில தேர்தல்களையும் அமைதியாக நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கவேண்டும்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள மேற்கு வங்காளத்தில் 5 கட்டங்களாக சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு 2-வது கட்ட தேர்தல் நடக்கும்போது, அத்துடன் தமிழகத்திலும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே, அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியிலோ, மார்ச் முதல் வாரத்திலோ தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, தமிழகத்தில் வாக்காளர் பெயர் பட்டியலில் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் 18-ந் தேதி வரை இந்தப் பணிகள் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 17-ந் தேதி வெளியிடப்பட உள்ளன. அப்போது, பட்டியலில் பெயர் உள்ளவர்கள்தான் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும்.
இந்த நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) தமிழகத்திற்கு வருகை தந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த ஆலோசனையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள் மற்றும் போலீஸ் டிஜிபி உள்பட காவல் துறை அதிகாரிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM