அனுமதி இன்றி இயங்கிய பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோடு, 13 ஜனவரி (ஹி.ச.) ஈரோடு நகரின் நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், அரசு அனுமதி பெறாமல் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் தயாரிக்கும் நிறுவனத்தை மறைமுகமாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தய
Sealed


ஈரோடு, 13 ஜனவரி (ஹி.ச.)

ஈரோடு நகரின் நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், அரசு அனுமதி பெறாமல் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் தயாரிக்கும் நிறுவனத்தை மறைமுகமாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவதாகவும், அந்தப் பகுதியிலிருந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுவதாகவும் அப்பகுதி மக்களிடமிருந்து புகார்கள் எழுந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், வீரப்பன் சத்திரம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் எந்தவிதமான அரச அனுமதியும் இன்றி இயங்கி வந்தது உறுதியாக தெரிய வந்தது. மேலும், தொழிற்சாலை பாதுகாப்பு விதிமுறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட எந்த விதமான சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பதும் ஆய்வில் வெளிப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு காவல்துறையினர் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். ஆய்வில், உரிய அனுமதி இல்லாமல் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் தயாரிக்கப்பட்டதும், சட்டத்திற்கு புறம்பாக நிறுவனம் செயல்பட்டு வந்ததும் உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, போலீசார் முன்னிலையில் அந்த பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், விதிமுறை மீறலுக்காக நிறுவன உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான அனுமதிகள் பெறாமல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து வந்தது கடுமையான குற்றம் என்பதால், இனி இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN