Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.)
இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நாள் முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கூட, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுத்தார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரி விதிப்பால், இந்திய வர்த்தகர்கள் பாதிப்படைவதை தடுக்க, ஐரோப்பா, நியூசிலாந்து உள்ளிட்டநாடுகளுடன் பிரதமர் மோடி வர்த்தக ஒப்பந்தம் செய்து வருகிறார்.
மேலும், அதிபர் டிரம்புடன் பேசுவதை கூட, பிரதமர் மோடி தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உடன்பாடு குறித்த அடுத்தக் கட்ட பேச்சு இன்று துவங்கவுள்ளது.
இதையொட்டி, டில்லி வந்த அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் மனக்கசப்பு விரைவில் நீங்கும், என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், இது குறித்து அவர் பேசியதாவது:
அமெரிக்காவுக்கு இந்தியாதான் மிக முக்கியமான நாடு. இந்தியாவை விட, வேறு எந்த நாடும் எங்களுக்கு முக்கியமல்ல.
இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவு என்பது வெறும் பரஸ்பரம் நலன் சார்ந்தது அல்ல. அதையும் கடந்து உயர்ந்த நிலை கொண்டது.
உலகின் பழமையான ஜனநாயக நாட்டிற்கும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டிற்கு இடையேயான சங்கமம் தான் இந்த வர்த்தக உடன்பாடு. இந்தியா, உலகின் மிகப் பெரிய நாடு.
வர்த்தக உடன்பாடு எனவே, அந்நாட்டுடன் வர்த்தக உடன்பாடு மேற்கொள்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. எனினும், உடன்பாட்டை எட்டுவதற்கு முழு வீச்சில் முயற்சிகள் எடுத்து வருகிறோம்.
இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகம் என்பது மிகவும் முக்கியமானது. அதே சமயம் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுகாதார துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற கவனம் செலுத்தி வருகின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்புடன் நான் பல நாடுகளுக்கு பயணம் செய்து இருக்கிறேன். அதனால், அவரது குணம் பற்றி நன்கு அறிவேன்.
பிரதமர் நரேந்திர மோடியுடனான, அதிபர் டிரம்பின் நட்பு உண்மையானது. எனவே, இருவருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பு விரைவில் முடிவுக்கு வரும். உண்மையான நண்பர்களுக்குள் சில நேரம் கருத்து வேறுபாடுகள் எழும். ஆனால், அது நிரந்தரமாக நீடிக்காது. ஒரு நாள் முடிவுக்கு வரும்.
டிரம்புடன் கடைசியாக நான் இரவு விருந்தில் பங்கேற்ற போது, இந்தியாவில் கடைசியாக மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்து என்னிடம் நினைவுகூர்ந்தார். மேலும், பிரதமர் மோடி குறித்து சிலாகித்து பேசினார்.
எனவே, அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டோ, அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ நிச்சயம் இந்தியாவுக்கு வருவார்.
பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இந்தியாவும் உறுப்பினராகவுள்ளது. அடுத்த மாதம் அதற்கான அழைப்பு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM